Blog

Blogs

2017-09-13 06:08:23

Blogs

 

 

செய்யும் விடயத்தில் விருப்பம் இருந்தால் கைவிடாமல் தொடர்ந்து முயற்சியுங்கள் : SciNirosh நிகழ்ச்சி தயாரிப்பாளர் நிரோஷன்

niiiii

 

 

நான் பெற்றுக்கொண்ட அறிவினை எனது தமிழ் சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன், என கூறும் கலாநிதி நிரோஷன் தில்லைநாதன் இணையத்தினூடாக பல அறிவியல் சார்ந்த வீடியோ தொகுப்புக்களை தமிழில் வெளியிட்டு அறிவியலுக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்.

இந்த இளைஞரின் SciNirosh என்கின்ற நிகழ்ச்சியானது சமூக வலைதளங்களில் புகழ் பெற்று காணப்படுகின்றது. இவரது நிகழ்ச்சி முழுவதிலும் விஞ்ஞான விவரணங்களும் வேறு பல கல்வி சார்ந்த கலந்துரையாடல்களும் ஏதோ ஒரு வகையில் எம் அன்றாட வாழ்க்கையோடு தொடர்பு பட்டவைகளாக காணப்படுகின்றன.

ஒரு இளம் தமிழ் ஊடக தொழில் முயற்சியாளராகவும், அறிவியல் விமர்சகராகவும், முதுநிலை மானியாகவும் தடம் பதித்துள்ள திரு நிரோஷன் தில்லைநாதன் தமிழ் வர்த்தக தளத்துடன் தனது முயற்சிகள் பற்றிய பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

நான் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தினை பூர்வீகமாக கொண்டவன். நான் பிறந்து இரண்டு மாதங்களிலேயே என் குடும்பம் ஜேர்மனிக்கு வந்து விட்டனர். பள்ளி பராயத்தில் இருந்தே கல்வி எல்லாமே ஜேர்மனியில் தான். பட்டப்படிப்பினை படித்து கொண்டிருந்த போது அறிவியலின் மீது பாரிய ஈர்ப்பு எனக்கு உண்டானது. இதனால் Msc முடிந்தவுடனேயே எனது முதுகலைமாணி பட்டப்படிப்பினையும் தொடங்கினேன்.

SciNiroshஇனுடைய ஆரம்பத்தினை பற்றி கூறும் முன்பு, எனக்கு இந்த துறையில் எவ்வாறு நாட்டம் ஏற்பட்டது என்று கூறுகின்றேன். ‘எமது மூளையின் நினைவாற்றல் என்ன?’ என்ற என்னுடைய கேள்வி தான் இதற்கு எல்லாம் முதல் படி. இறுதியாக இணைய தளங்களின் மூலமாகவும் வேறு பல அறிவு மூலங்களில் இருந்தும் விடையினை அறிந்து கொண்டேன்.

எனக்கு கிடைத்த இந்த சுவாரஸ்யமான பதிலினை முக நூலினூடாக எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஏனைய நண்பர்களுக்கும் இது ஆர்வம் மிக்கதாக இருக்கும் என எனக்கு உறுதியாக தெரிந்தது. எனினும் இது பற்றி தமிழில் எந்த ஒரு பதிவும் இணையத்தில் காணப்படவில்லை. எனவே இந்த தலைப்பில் தமிழில் ஒரு கட்டுரையை எழுதி எனது முக நூலில் பகிர்ந்து கொண்டேன். இதற்கு பல நண்பர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. உண்மையில் நான் இதனை எதிர்பார்த்து இருக்கவில்லை. இரண்டு வாரங்களுக்கு பின்னர் எனக்குள் இவ்வாறே இன்னும் ஒரு கேள்வி எழுந்தது. எனவே அதையும் எனது கட்டுரையில் பதிவு செய்தேன். இது ஜனவரி 2014 வரை தொடர்ந்தது. எனது முகப்புத்தகத்தில் பதிவு செய்த கட்டுரைகளுக்கு, நான் அறியாதவர்களிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் கிடைக்க பெற்றன.

எனது பதிவுகளை பல நண்பர்கள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். இது எனக்கு ஒரு விடயத்தினை தெளிவு படுத்தி இருந்தது. தமிழர்கள் விஞ்ஞானத்தில் ஆர்வமாக உள்ளார்கள். அதிலும் அவர்கள் தமிழ் மூலம் விஞ்ஞானத்தினை அறிவதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

இதன் மூலம் ஏற்பட்ட உந்துதலின் காரணமாக எனக்கான ஒரு பக்கத்தினை தொடங்கினேன். அறிவு டோஸ் எனப்படுகின்ற இந்த பக்கத்தில் தினமும் அறிவியல் தொடர்பான கட்டுரைகளை பகிர்ந்து வருகின்றேன். இத்தகைய வரவேற்பு எனக்கு கிடைக்கும் என நான் எதிர்பார்த்து இருக்கவில்லை. பலரும் என்னுடைய கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்குமாறு கூறி வருகின்றனர். எனினும் எனது நோக்கம் அதுவல்ல. அறிவியலை தமிழில் கொண்டு வருவதே எனது நோக்கம். தமிழை வாசிக்க முடியாதவர்களை அடைவதற்கு என்ன வழி என யோசித்த போது உருவானதே SciNirosh நிகழ்ச்சியாகும். இப்போது என்னுடைய பாகங்கள் 35,000 இலிருந்து 100,000 எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்துள்ளன.